இலகுவழி

Monday, 18 October 2021

குறை கூறுதல்

நான் வெளி மாவட்டம் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த  காலத்தில் மேலதிகாரி ஒருவர் எப்பொழுதும் எனது வேலையில் ஏதாவதொரு குறையினை கண்டுபிடித்து கூறிக்கொண்டிருப்பர். நான் அவரிடம் நல்லபெயர் எடுக்கவேண்டும் என எனது வேலையினை மிகக்கவனமாக செய்தும் என்னால் அவரிடம் நல்லபெயர் எடுக்க முடியவில்லை. எனக்கு சலிப்பு ஏற்பட்டுவிட்டது. என்ன செய்யலாம் என தந்தையிடம் கேட்டேன். சிறிது யோசனைக்கு பிறகு அவர் என்னிடம் பின்வருமாறு கூறினார்.


செயற்திட்டங்களை மேற்கொண்டு வெற்றிபெறும் ஆர்வம் உனக்கு இருப்பதனால் நான் ஒரு செயற்திட்டத்தினை சொல்கிறேன். அதனை நீ ஒரு வருடம் நடைமுறைப்படுத்தி அதன் பலனை எனக்கு தெரிவிக்கவேண்டும். அதன் பின்னர் இப்பிரச்சனையை தீர்க்க வழி கூறுகிறேன் என்கிறார். அதாவது ஒரு வருடத்திற்கு மேலதிகாரி கூறும் குறைகளை வகைப்படுத்தி அவைகள் மீண்டும் ஏற்படாவண்ணம் பார்த்துக்கொள்ளவேண்டும். அதேநேரம் அவர் சுட்டிக்காட்டும் குறைகளை உடனுக்குடன் சீர்செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என்கிறார். நான் ஏற்கனவே இவற்றினை செய்துவிட்டேன் என்று கூறினேன். சரி எனக்காக மீண்டும் அவற்றினை ஒரு குறிப்பேட்டில் ஒழுங்குமுறைப்படி வகைப்படுத்தி எழுதி அவற்றிற்கு உன்னால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும் பதிவு செய்து மீண்டும் அதே குறையினை ஏற்படாவண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். இதனை தொடர்ச்சியாக ஒருவருடத்திற்கு செய்தல் வேண்டும் என்கிறார்.


நானும் அவ்வாறே செய்யத்தொடங்கினேன். அவரிடம் செல்லும் முன் எனது குறிப்பேட்டினை ஒருதடவை பார்த்துக்கொள்வேன். ஆறுமாதங்கள் கடந்தன. மேலதிகாரியின் குறைகூறும் நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் எனது நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது. மேலதிகாரி ஏற்கனவே கூறிய குறையினை முடிந்தால் மீண்டும் கூறட்டும் பார்ப்போம் என்று போட்டிபோடுவது போன்ற எண்ணம் எனக்குள் தோன்றியிருந்தது. இந்த கடிதத்திற்கு அவர் என்ன குறைபிடிக்கிறார் பார்ப்போம் என்று உற்சாகத்துடன் அவரிடம் செல்வேன். ஆனால் அவரும் புதிதாக ஒரு குறையை கூறுவார். நான் அவரை வென்றுவிட்டதாக எண்ணி சந்தோஷப்படுவேன்.


அவ்வப்போது என்னுடைய வெற்றி தொடர்பாக தந்தையுடன் உரையாடி மகிழ்வேன். ஒரு தடவை தந்தை, இப்பொழுது மற்றவர்கள் உன் வேலையைப்பற்றி என்ன கூறுகிறார்கள் என கவனித்துப்பார் என்றார். என்ன ஆச்சரியம். மற்றவர்கள் என்னுடைய வேலையின் நேர்த்தியையும் என்னுடைய வளர்ச்சியையும் வெகுவாக பாராட்டினார்கள். எனக்கு மேலதிகாரியில் ஓர் மரியாதை ஏற்பட்டது. 


மேலதிகாரி இடமாற்றம் பெற்றுச்செல்லும்வரை என்னைக் குறைகூறுவதை நிறுத்தவில்லை. ஆனால் நான் இடமாற்றம் பெற்றுவந்த பின்னரும் அந்த அலுவலகம் எனது உதவியை நாடுகிறது.

குறை கூறுதல்

நான் வெளி மாவட்டம் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த  காலத்தில் மேலதிகாரி ஒருவர் எப்பொழுதும் எனது வேலையில் ஏதாவதொரு குறையினை கண்டுபிடித்து கூற...